தமிழகம்

சமூகப் பணிகளுக்காக தனியார் பங்களிப்பு ரூ.20,000 கோடி: ப.சிதம்பரம் தகவல்

செய்திப்பிரிவு

கம்பெனிகள் தங்கள் லாபத்தில் 2 சதவீதத்தை சமுதாயப் பணி களுக்குச் செலவிட வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியதால், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.20,000 கோடிக்கு சமுதாயப் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி தொடங்கப்பட்டு 103 ஆண்டுகள் ஆவதையொட்டி வங்கியின் நிறுவன நாள் விழா மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியா முழுவதும் வங்கியின் 103 புதிய கிளைகள், 103 ஏ.டி.எம். மையங்கள் ஆகியவற்றை திறந்துவைத்துப் பேசியதாவது:

இந்த வங்கியின் நிறுவனர் சொராப்ஜி பொக்கன்வாலா ஆங்கிலேயர்கள் நடத்திய வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில் இந்தியர்கள் யாரும் வங்கி நடத்தவில்லை. தனியாக வங்கி ஆரம்பிப்பதற்காக இவர் தன் பதவியை ராஜினாமா செய்தபோது, ஆங்கிலேயர்கள் ஏளனமாகப் பார்த்துள்ளனர். 1911-ம் ஆண்டு இவர் வங்கியை தொடங்கியபோது, இந்தியாவில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட, இந்தியர்கள் மட்டுமே பணிபுரிகிற முதல் வங்கி என்ற பெயரை இந்த வங்கி பெற்றது.

பள்ளிகளில் குடிநீர் வசதி

புதிய வங்கி, புதிய ஏ.டி.எம்.கள் திறப்பது, மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவது எல்லாம் வழக்கமான பணிகள்தான். இந்த ஆண்டு புதிய நிகழ்வாக தனியார் நிறுவனங்களின் சமூக நலப்பணிகள் திட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் 103 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்கும் இந்த வங்கியின் பணியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

60 ஆண்டு காலமாக இருந்த கம்பெனி சட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. புதிய கம்பெனி சட்டத்தின் ஒரு பகுதியாக, பெரிய கம்பெனிகள் தங்கள் ஆண்டு வருமானத்தில் இரண்டு சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்கு (சி.எஸ்.ஆர்.) பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் ரூ.20,000 கோடி மதிப்பில் சமூகநலப் பணிகள் நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசு எத்தனையோ நல்ல காரியங்களை செய்தாலும் அது நிதானமாக, மெதுவாகத் தான் செயல்படுத்தப்படும். ஆனால், தனியார் நிறுவனங்கள் திட்டங்களை வேகமாகச் செயல்படுத்தும்.

புதிய சட்டத்தின்கீழ் இந்த பணிகளைத்தான் செய்ய வேண்டும், இவர்களுக்குத்தான் உதவ வேண்டும் என்று அரசு சொல்லாது. மருத்துவமனை, பள்ளிகள், சாலை வசதி என்று எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் செலவிடலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் வங்கிச் சேவை கிராமங்கள் வரை விரிவடைந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அரசு வங்கிகளுக்கு மட்டும் 1,10,000 கிளைகள் உள்ளன. இதுதவிர ஆண்டுதோறும் 7000 புதிய கிளைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்குள் மேலும் 10,000 கிளைகள் தொடங்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டபடி, இந்த வங்கிக் கிளைகளை இப்போது திறந்து வருகிறோம். புதிய வங்கிகள் திறக்கப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றார்.

வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜீவ்ரிஷி பேசுகையில், “இந்தியாவில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் வங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாதான். வெறும் ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இப்போது ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடிக்கு வர்த்தகப் பரிவர்த்தனை செய்கிறது. இந்தியாவில் 45,000 கிளைகளைப் பரப்பி, பெரிய அரசு வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது” என்றார்.

விழாவில் செயல் இயக்குநர் ஆர்.கே.கோயல் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT