தமிழகம்

பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட வனத்துறை அதிகாரிகளை நீக்க திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பழங்குடியின பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்ட வனத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பழங்குடியின பெண்களிடம் சோதனை என்ற பெயரில் வனத் துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதை கண்டித்து நேற்று தேனி பங்களாமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வனப்பகுதியில் தேன், கிழங்கு எடுத்து வந்த பழங்குடியின பெண்களை வனத்துறையினர் சோதனை என்ற பெயரில் மானபங்கம் செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உணவு சாப்பிடாமலும், உறக்கம் இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களை பணி இடை நீக்கம் செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதிகாரிகளை காப்பாற்று வதற்காக அப்பாவி மக்களுக்கு தமிழக அரசு அநீதி செய்துவிடக் கூடாது என்றார்.

SCROLL FOR NEXT