மழைக்காலத்தில் அதிகமாகப் பரவும் நோய்களில் ஒன்றான வைரஸ் காய்ச்சலால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் எஸ்.ரகுநந்தன் தி.இந்து நிருபரிடம் கூறுகையில், வைரஸ் காய்ச்சல் என்பது ‘Rhinovirus’ 'Adeno virus' 'Influenza A virus' மற்றும் Streptococcus எனப்படும் பாக்டீரியா ஆகிய கண்களுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வரும் காய்ச்சலாகும். .
ஒருவர் சளி, இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் எதிரில் உள்ள மற்றவருக்கு அந்த கிருமிகள் பரவக்கூடும். எதிரில் உள்ள அந்த நபர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவராக இருந்தால் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
யில் இதுவரையில் 42 பேர் வைரஸ் காய்ச்சலால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனையின் ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்பிரதாப் கூறினார். மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் தாம்பரம்,மடிப்பாக்கம், பூந்தமல்லி,சூளைமேடு, அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து வருவதாக அவர் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 குழந்தைகளில் 16 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுத் துறையின் முதன்மை மருத்துவர் ஜெயச்சந்திரன் கூறினார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் 21பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஆறு பேர் குழந்தைகள் என்றும் மருத்துவமனையின் ஆர்எம்ஓ டாக்டர் எம். ரமேஷ் தெரிவித்தார்.
தலைவலி, மூட்டு வலி, சளி, இருமல், உடல் வலி ஆகிய பிரச்சனைகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்வது நல்லது என்றும், வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கூட்ட நெரிசலாக உள்ள இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் ஒய்வு எடுத்து கொண்டால் வைரஸ் காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர் ரகுநந்தன் கூறினார்.