தமிழகம்

காமன்வெல்த் மாநாடு: காங்கிரஸுக்கு கருணாநிதி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு, இந்தியாவைச் சார்ந்த துரும்புகூட செல்லக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, அம்மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக, சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பது என நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில் முடிவு எடுத்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக்கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி, தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்” என்று காங்கிரஸுக்கு எச்சரித்தார்.

பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தியா சார்பில் அந்த மாநாட்டில் கலந்துகொண்டால், உங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, “இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தான் பொருள்” என்றார்.

தமிழக சட்டப் பேரவையில் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஆதரித்த நிலையில், மத்தியில் மாறுபட்டு காணப்படுவது குறித்த கேள்விக்கு, “வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்” என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

கருணாநிதி, திமுக, இலங்கை காமன்வெல்த் மாநாடு, மத்திய அரசு, பிரதமர், காங்கிரஸ், காமன்வெல்த் மாநாடு

SCROLL FOR NEXT