அரசு பள்ளிகள் என்றாலே உடைந்து கிடக்கும் பலகைகள், நாற்காலிகள். சுகாதாரமற்ற தண்ணீர் தொட்டிகள், மோசமான கழிப்பறை ஆகியவைதான் பொதுவாக ஞாபகத்துக்கு வரும். இந்த நிலையை மாற்றிக் காட்டி இருக்கிறது, மதுரை அருகே உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளி.
மதுரை மாவட்டம், கப்பலூர் அருகே பசுமையான மரங்கள் சூழ அமைந்துள்ளது உச்சப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை உட்பட 11 கழிப்பறைகள் இருக்கின்றன. குடிநீர் மற்றும் கழிப்பறை உபயோகத்துக்காக 3 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதால், அரசு ஊழியர்களின் குழந்தைகளும் இங்கே சேர்ந்து படிக்கிறார்கள்.
1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், தற்போது 240 மாணவ, மாணவயிர் படித்து வருகின்றனர். இதில் 40 பேர், இந்தாண்டு புதிதாகச் சேர்ந்துள்ளனர். 8-ம் வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும், அடிப்படை வசதிகளை சிறப்பாக நிறைவேற்றி உள்ளனர். கழிப்பறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுவதுடன், கழிப்பறை சென்று வந்ததும் கையைக் கழுவுவதற்காக ஒவ்வொரு கழிப்பறை அருகிலும் சோப்பு வைக்கப்பட்டுள்ளது. சுவையான குடிநீரை, நன்கொடையாளர்களே லாரி மூலமாக பள்ளிக்கு வழங்குகின்றனர்.
உச்சப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் அணிவகுத்திருக்கும் பசுமையான மரங்கள்.
பள்ளி வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுவதுடன் பசுமையாக காட்சி தருகிறது. இதற்காக வேம்பு, கொடுக்காய்ப்புளி, வாகை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன. வகுப்பறைகள் வர்ணம் தீட்டப்பட்டு அழகாக காட்சி தருவதுடன், அவற்றின் சுவர்களில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள், கணித சூத்திரங்கள், கணினி பயன்பாட்டில் உள்ள பொருட்கள் என பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை என். சாந்தி கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் பெற்றோர் கூட்டம், கிராம வளர்ச்சிக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை நடத்துகிறோம். பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பெற்றோர்களை அழைக்கிறோம். கிராம மக்கள் இப்பள்ளியின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாவிட்டாலும் கூட பள்ளியையோ, மரங்களையோ யாரும் சேதப்படுத்தவில்லை. தங்கள் வீடுகளை போலவே பொதுமக்கள் இந்த பள்ளியை பாதுகாக்கின்றனர்.
நன்கொடையாளர்களும் இப்பள்ளிக்கு கழிப்பறை வசதி, டேபிள், மேடை என தாராளமாக உதவி செய்து வருகின்றனர். இதனால் சுற்றுப்புற கிராமத்தினர் மட்டுமின்றி அரசு ஊழியர்களின் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர். எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள், பிற பள்ளிகளிலும் சிறந்து விளங்குவது எங்களுக்கு கிடைத்த நற்சான்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்பள்ளியில் பொது அறிவு வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மாணவர் கள் பொது அறிவில் திறன்மிக்கவர்களாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.