தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பெரும் பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாது தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் வெப்பநிலை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை, வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று அவ்வப்போது சற்று பலமாக வீசக்கூடும். மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. வெப்பம் சற்று அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்த பட்ச வெப்பநிலை 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நிலவிய வெப்பநிலையை பொருத்தவரை அதிகமாக மதுரையில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.