தமிழகம்

தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த ஓபிஎஸ் அணி முயற்சி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் உள்ள நாகாத்தமன் கோயிலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை 6 மணியளவில் சாமி கும்பிட்டுவிட்டு திறந்த ஆட்டோவில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

எங்கள் கட்சிக்காரர்கள் யாருக்கும் பணம் தரவில்லை. திமுகவினரோ, பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களோ தொப்பி போட்டுக் கொண்டு பணம் கொடுத்துவிட்டு எங்கள் மீது பழி சொல்லலாம். இத்தொகுதியில் 2 முறை ஜெயலலிதா போட்டியிட்டார். அவருக்காக ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர். அப்போது ஓபிஎஸ் பணம் கொடுத்தாரா?

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை நிறுத்தியதுபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையும் நிறுத்த முயற்சி செய்கின்றனர். எனது ட்விட்டர் பக்கத்தின் மேல்பகுதியில் ஏற்கெனவே இரட்டை இலை சின்னம் இருந்தது. தற்போது அது அகற்றப்பட்டு விட்டது. அதைச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தொப்பி சின்னத்தை சொல்லிதான் ஓட்டு கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT