தமிழகம்

நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் கூடுவதாக தகவல்: மெரினா கடற்கரை சாலையில் 1,500 போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் இளை ஞர்கள் கூடுவதாக கிடைத்த தகவலால் 1,500 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக் கட்டு போராட்டத்தைப்போல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் இளைஞர்கள் களத்தில் இறங்கி போராட முடிவு செய்துள்ளனர். ஆனால் இதை ஆரம்பத்திலேயே அடக்கி விட வேண்டும் என்று போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நேற்று முன்தினம் மெரினா கடற்கரை சாலையில் திருவள்ளுவர் சிலைக்கு கீழே மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். விரைந்து வந்த போலீ ஸார் 20 மாணவர்களை உடனடி யாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் கல்லூரி முன்பு கூடி நின்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். கோரிக்கைகள் அடங்கிய பேனர் களையும் கைகளில் வைத்திருந் தனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடத்தி விட்டு, போலீஸாரின் கோரிக்கையை ஏற்று கலைந்து சென்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இளைஞர்கள் மெரினாவில் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் மெரினா காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டமாக 5 இளைஞர்கள் கூடினாலும் அவர்களை கலைந்து போகச் சொன்னார்கள். இதனால் நேற்று மாலையில் மெரினாவில் பரபரப் பான சூழ்நிலை காணப்பட்டது.

SCROLL FOR NEXT