தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீண் குமார் கடந்த நான்காண்டுகளாக பணி யாற்றி வந்தார். கடந்த 2011 சட்டசபை மற்றும் 2014ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலை திறமையாக நடத்தி முடித்தார். மேலும் பல்வேறு இடைத் தேர்தல்களையும் அமைதி யாக நடத்தினார்.
ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் துறை பாரபட்சமாக நடந்து கொண்டதாக அரசியல் கட்சிகள் புகார் கூறின.
இந்நிலையில், தன்னை வேறு பதவிக்கு மாற்றுமாறு, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, மூன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. இதில் தமிழக வேளாண்துறை முதன்மை செயலர் சந்தீப் சக்சேனா, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.
பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், தமிழகத் தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா, நேற்று நண்பகலில் பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் பிரவீண் குமார் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, வரும் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு 100 சதவீதம் பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வண்ண வாக்காளர் அட்டை வழங்குதல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், அவரது எம்.எல்.ஏ., தொகுதி குறித்த அதிகாரப்பூர்வ முடிவெடுத்தல் மற்றும் அவரது ரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.