எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை அதிகாரிகள் முழுமையாக தெரிவிக்க முன்வராதது, அங்குள்ள விலை மதிக்க முடியாத 10-ம் நூற்றாண்டின் பஞ்சலோக சிலைகள் கொள்ளை போயிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1846-ல் சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகம், இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தின் பிரதான வாயிலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இரவு அருங்காட்சியகத்தின் படிமக் கூடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பழங்கால நாணயங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் இந்தக் கூடத்தில் முதல் மாடியில் இருந்த பஞ்சலோக சிலைகள் இடம் மாறி இருந்தன. இதனால், சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாமோ என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
உண்மை மறைக்கப்படுகிறதா?
கடந்த 2 நாட்களாக அருங்காட்சியக கண்காணிப்பாளர் மற்றும் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் அலுவலகத்திலேயே இல்லை என்று பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், கொள்ளை குறித்து இதுவரை அருங்காட்சியக நிர்வாகம் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
சில அதிகாரிகளிடம் பேசியபோது, “காணாமல்போன பொருட்கள் குறித்த விவரங்களை வெளியே சொன்னால் சஸ்பெண்ட் செய்துவிடுவோம் என்று எங்களை உயர் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம்” என்றவர்கள், தங்கள் மொபைல் போனையும் அணைத்துவிட்டனர்.
கொள்ளை சம்பவத்தை அதிகாரிகள் மூடி மறைப்பது, அருங்காட்சியகத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சலோக சிலைகள் மற்றும் செம்பு, தாமிர பட்டயங்கள் ஏதேனும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.
அருங்காட்சியக போலீஸாரை தொடர்பு கொண்டபோது, “மொகலாயர் காலத்து இரண்டு நாணயங்கள் மட்டுமே காணாமல் போனதாக அருங்காட்சியக காப்பாளர் புகார் கொடுத்துள்ளார். அருங்காட்சியகத்தில் சேகரிக் கப்பட்ட கைரேகைகள் மூலம் பழைய சிலைக் கடத்தல் கிரிமினல்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம்” என்றனர்.
சிலைக் கடத்தல் கும்பல்கள்
இந்தியாவில் ஏராளமான சிலைக் கடத்தல் கும்பல்கள் இருந்தாலும் சுபாஷ்கபூர், அவரது சகோதரி சுஷ்மா ஷெரின், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த வாமன் நாராயண கிமா, ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த ராமசாமி கோவிந்தராஜுலு ஆகியோர் பிரபலமாக அறியப்படு பவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், ரத்தினம், கலியபெருமாள் ஆகியோர் இவரது இந்தியக் கூட்டாளிகள்.
கடந்த 2011-ல் ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூர், தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கூட்டாளிகளும் சிறையில் உள்ளனர்.
சிலைகளை கடத்துவது எப்படி?
இந்தியாவில் இருந்து பழமைவாய்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்வதை ஒழுங்குபடுத்த 1972-ம் ஆண்டில் Antiquities and art treasures act-1972 என்ற சட்டம் இயற்றப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் ஒரு பொருளை பரிசோதித்து, அது பழமையானது இல்லை என்று சான்றிதழ் கொடுத்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.
பொதுவாக சிலைக் கடத்தலில் ஈடுபவர்கள், அருங்காட்சியகங்களின் சிலைகளை படம் எடுத்து அதேபோன்ற போலி சிலையை செய்வார்கள். பின்பு ஒரிஜினல் சிலையை கடத்திவிட்டு, அங்கு போலியை வைத்துவிடுவார்கள். ஒரிஜினல் சிலையை முலாம் பூசியும் சில மாற்றங்கள் செய்தும் நவீனப்படுத்தி, அதற்கு பழமையான பொருள் அல்ல என்று சான்றிதழ் வாங்கிவிடுவார்கள்.
சீனாவின் 'ஹுவாங்’, லண்டனின் 'சொத்பி', அமெரிக்காவின் 'கிறிஸ்டி' ஆகிய பெரும் நிறுவனங்கள் இந்தியாவின் பழமையான சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
மருந்தாக மாறும் பஞ்சலோகம்
சீனா, தாய்லாந்து, மலேசியா, தைவான், துபாய் போன்ற நாடுகளில் பஞ்சலோக சிலைகள் மருத்துவப் பயன்பாட்டுக்காக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. தங்கம், வெள்ளி, துத்தநாகம், செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களின் குறிப்பிட்ட விகித கலப்பே பஞ்சலோகம். இது பழங்காலத்தில் தீராத நோய்களையும் தீர்த்ததாக குறிப்பிடுகிறது பழச்சித்தரான போகர் இலக்கியம். அதனாலேயே பஞ்சலோக சிலைகளை உடைத்து, தூளாக்கி அதனை மருந்தாகவும் மேற்கண்ட நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பு பெட்டகம்
சென்னை அருங்காட்சியகத்தில் தொடர் திருட்டுகள் நடந்ததால் 2003-ம் ஆண்டு ஜெர்மனி மற்றும் தைவான் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கண்ணாடி பெட்டகங்களில் பஞ்சலோக சிலைகள் வைக்கப் பட்டன. 9 முதல் 15ம் நூற்றாண்டு வரையான சிலைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இச்சிலைகளின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் தொல்லியல் துறையினர்.
அருங்காட்சியகத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அங்குள்ள சிலைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.