தமிழகம்

சிபிஐ பதிவு செய்த 2-வது வழக்கில் சேகர் ரெட்டி உட்பட 3 பேர் மீண்டும் கைது: பரஸ்மால் லோதாவை ஆஜர்படுத்த வாரண்ட்

செய்திப்பிரிவு

ரூ. 8 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ பதிவு செய்த 2-வது வழக்கில், 3 பேரையும் வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 147 கோடியும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ. 24 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார் மற்றும் கூட்டாளிகளான திண்டுக் கல் சர்வேயர் ரத்தினம், முத்துப் பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை யும், 5 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுக் களையும் சிபிஐ முதன்மை அமர்வு நீதிபதி ஜி.விஜயலட்சுமி ஏற் கெனவே தள்ளுபடி செய்து உத்தர விட்டார். இந்நிலையில் சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரது நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து இந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிபிஐ 11வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி ஜி.விஜயலட்சுமி உத்தரவி்ட்டார். அதன்படி சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட ஆடிட்டர் பிரேம்குமார் ஆகிய 3 பேர் நேற்று நீதிபதி கே.வெங்கடசாமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை ஜனவரி 17 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனீவாசலு ஆகிய 3 பேர் மீதும் ரூ. 8 கோடிக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2-வது வழக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்துள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து 2-வது வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரையும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறை யில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார்.

சேகர் ரெட்டி தரப்பினர் மீது சென்னை சிபிஐ போலீஸார் பதிவு செய்துள்ள முதல் வழக்கில், 6-வது குற்றவாளியாக கொல் கத்தா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவையும் சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று அமலாக் கத்துறையினர் இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிபிஐ வளையத்துக்குள் வருவதற்கு முன்பாகவே சேகர் ரெட்டி மற்றும் பரஸ்மால் லோதா மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். எனவே அந்த வழக்கில் டெல்லி சிறையில் உள்ள பரஸ்மால் லோதாவை இங்கு ஆஜர்படுத்த, வாரண்ட் பிறப்பி்க்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி, சேகர் ரெட்டிக்கு உதவிய வழக்கில் பரஸ்மால் லோதாவை நாளை (ஜன.5) ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பித்தார்.

சேகர் ரெட்டி தரப்பினர் மீது சென்னை சிபிஐ போலீஸார் பதிவு செய்துள்ள முதல் வழக்கில், 6-வது குற்றவாளியாக கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவையும் சேர்த்துள்ளனர்.

SCROLL FOR NEXT