தமிழகம்

ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி சட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில்துறை வளர்ச்சியில் இந்தியா முன்னேற் றம் அடைந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் உரிய நேரத்தில், சரியான முடிவு எடுக்கும் ஆளுமை இல்லாததால், தொழில்துறை வளர்ச்சியில் சிக்கல் நிலவுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. வளர்ச்சி யின்றி இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்குகளைக் குறைத்து, அதில் தனியாரின் முதலீடு மூலம் அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கான பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகி றோம். திருச்சி பெல் சார்புடைய சிறு,குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜிஎஸ்டியால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. உற்பத்தித் துறையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வருமானமும் குறைய வாய்ப்பில்லை.

மகாத்மா காந்தி குறித்து பாஜக தலைவர் அமித் ஷா கூறிய கருத்து திரித்து விடப்பட்டிருக்கிறது என்றார்.

பின்னர், புதுக்கோட்டையில் பாஜக சார்பில் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர் வோம்’ எனும் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், மத்திய அமைச் சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை உரத் தொழிற்சாலை இயக்குநர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலம் கொடுக்காத தால்தான் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்கவில்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை என மாநில அரசு முடிவு செய்தால் நிறுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பியுள்ள சட்டவரை வுக்கு மத்திய அரசு பதிலளிக்கும். ‘நீட்’ தேர்வுக்கு ஏற்ப தமிழக மாண வர்களைத் தயார் செய்வதுதான் சிறந்தது.

இறைச்சிக்காக மாடுகளை விற்க வேண்டாம் என்றுதான் உத்தரவிடப்பட்டுள்ளதே தவிர, மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் எனக் கூறவில்லை என்றார்.

SCROLL FOR NEXT