அரியலூர் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை திருடு போனது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரம், 23 கிலோ எடை உள்ள சொர்ணாம்பிகை அம்மன் ஐம்பொன் சிலை இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை கோயிலுக்குச் சென்ற மாதவன் அய்யர், அங்கிருந்த ஐம்பொன் அம்மன் சிலை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைக்கா மல், கள்ளச்சாவி போட்டுத் திறந்து சிலையைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து கோயிலின் தர்மகர்த்தா ராமசாமி, அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.