தமிழகம்

நெஞ்சை பதற வைக்கும் வீடியோ: குழந்தை வாயில் பீர் ஊற்றும் தந்தை- வாட்ஸ்-ஆப், பேஸ்புக்கில் வேகமாக பரவுகிறது

செய்திப்பிரிவு

வீட்டில் தவழும் குழந்தையின் வாயில் பீர் ஊற்றும் தந்தையின் வீடியோ வாட்ஸ்-ஆப், பேஸ்புக்கில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூடியும், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தை காலையில் 2 மணி நேரம் குறைத்தும் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் தவழும் குழந்தைக்கு தந்தையே பீர் கொடுக்கும் வீடியோ வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை ஷேர் செய்பவர்கள் குழந்தைக்கு பீர் கொடுக்கும் தந்தையை கண்டுபிடிக்கும் வரை இந்த வீடியோவை அதிகமாக ‘ஷேர்’ செய்யுங்கள் என்ற வாசகத்தையும் சேர்த்து அனுப்புகின்றனர்.

மொத்தம் 2 நிமிடம் 43 விநாடிகள் ஓடும் வீடியோவில், வீட்டில் தவழும் குழந்தையின் அருகில் ஒரு பீர் பாட்டிலையும், ஒரு மது பாட்டிலையும் தந்தை வைக்கிறார்.

வீட்டு பெண்கள் சிரிப்பு

பீர் பாட்டிலின் மூடியை திறந்து குழந்தையின் வாயிலில் பீரை ஊற்றுகிறார். பின்னர் அப்பா குடிக்கிறேன் பாருடா என்று சொல்லி பீரை குடித்துவிட்டு பின்பு குழந்தையின் வாயில் பீரை ஊற்றுகிறார். இதனைப் பார்க்கும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் சிரிக் கின்றனர்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், குழந்தைக்கு பீர் கொடுக்கும் தந்தை மற்றும் அதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு திருவண்ணா மலை மாவட்டத்தில் 4 வயது சிறுவனுக்கு மது கொடுத்து குடிக்க வைத்த இளைஞர்களின் வீடியோ வாட்ஸ்-ஆப், பேஸ்புக்கில் பரவியது. இதையடுத்து போலீஸார் அந்த இளைஞர்களை கைது செய்தனர்.

அதேபோல் மது போதையில் பள்ளி மாணவிகள் தள்ளாடுவது, மது குடிக்கும் பள்ளி மாணவர்களின் வீடியோக்களும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT