தமிழகம்

தற்கொலை நிரந்தர தீர்வல்ல: நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கு விஷால் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட தற்கொலை செய்து கொள்வது என்பது நிரந்தர தீர்வல்ல, அதனை கைவிட வேண்டும் என்று நடிகர் விஷால் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நேற்று தொடங்கிய நெல் திருவிழாவில் பங்கேற்று, ‘நெல் செய்தி’ என்ற காலாண்டு இதழை வெளியிட்டு நடிகர் விஷால் பேசியதாவது:

தஞ்சை விவசாயி பாலன் போலீஸாரால் தாக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டதும் என்னைப் போலவே நடிகர் கருணாகரனும் உதவி செய்தார். எனக்கு விதை விதைக்கும் பணி ரொம்ப பிடிக்கும். இங்கு 5 பேர் இந்த இயக்கத்தை தொடங்கியது போல, சென்னையி்ல் நாசர், கருணாஸ், கார்த்தி, பொன்வண்ணன், ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு அணியைத் தொடங்கினோம். அது பெரிதாக உருவாகி தென்னிந்திய நடிகர் சங்கத்தை நடத்த முடிந்தது.

விவசாயிகளுடைய உணர்வு களைப் புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாற வேண்டும். விரைவில் தஞ்சை மாவட்டத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். என்னுடைய நீண்ட நாள் விருப்பம் அதுதான்.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என விவசாயத்தை வர்ணிக்கிறார்கள். பொறியியல் துறை, மருத்துவத் துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு தன்னம் பிக்கை வர வேண்டும். கடன் உள்ளிட்ட எந்த பிரச்சினை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக் கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல. விவசாயிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். அடுத்த முறை நெல் திருவிழாவில் நான் பார்வையாளராக அமர்ந்தி ருப்பேன். நீங்கள் சேற்றில் கை வைத்தால் தான் நான் சோற்றில் கை வைக்க முடியும் என்றார்.

எப்போதும் உடனிருப்போம்

நடிகர் ரோகிணி பேசும்போது, “தஞ்சை விவசாயி பாலன் பிரச்சினை குறித்து தகவல் கிடைத்ததும், நடிகர் விஷாலிடம் பேசினேன். உடனடியாக அவர் உதவினார். உதவி செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டும். இந்த மண்ணில் பேசுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். விதை விதைத்து இந்த பணியைத் தொடங்கியது நல்ல செயல். விவசாயிகள் பயிரோடு சேர்த்து தைரியத்தையும் பயிர் செய்ய வேண்டும். விவசாயிகள் தோல்வி காண நாங்கள் விடமாட்டோம். எப்போதும் உடனிருப்போம்” என்றார்.

SCROLL FOR NEXT