“தி.மு.க. உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை; உட்கட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றால் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது சிரமமாகிவிடும்” என்று திமுக எம்.பி.யும் அழகிரி ஆதரவாளருமான ஜே.கே.ரித்தீஷ் தெரிவித்தார்.
கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் மு.க.அழகிரி உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்கியது திமுக தலைமை. கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்களுடன் கட்சிப் பொறுப்பாளர்களோ தொண்டர் களோ எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது விதி. ஆனால், அழகிரி பிறந்த நாளின்போது, திமுக எம்.பி.க்கள் ரித்தீஷும் நெப்போலியனும் அவருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களும் இன்னும் பலரும் அழகிரியுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். ஆனாலும், அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் ரித்தீஷ் கூறியதாவது: ’’திமுக உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை. உதாரணத்துக்கு எனது ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருக்கிறார் சுப. தங்கவேலன். அடுத்ததாக அவரது மகன் அந்தப் பதவிக்கு வரப்போவதாகக் கூறுகின்றனர். அதன் பிறகு அவரது பேரன் அந்தப் பதவிக்கு வந்தாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரட்டும். ஆனால், தொண்டர்களின் ஆதரவுடன் வரவேண்டும். எங்கள் மாவட்டத்தில் கட்சித் தேர்தலை முறையாக நடத்தவில்லை. உட்கட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றால் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது சிரமமாகிவிடும்.
தலைமைக்கு புகார் கடிதம்
இதையெல்லாம் தலைமைக்கு நாங்கள் புகாராக எழுதி அனுப்பிவிட்டோம். அந்தப் புகார்கள் தலைவரின் கைக்கு போயிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால், அவர் கைக்கு புகார்கள் போனதா என்றே தெரியவில்லை. கட்சிக்குள் தவறுகள் நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதனால் வரும் தோல்விகளுக்கு நாமும்தான் பொறுப்பேற்க வேண்டி இருக்கும். அதனால், கட்சியின் ஆரோக்கியம் கருதி உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம். நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு நல்லது எடுக்காவிட்டால் அதிமுக-வுக்குதான் சாதகமாகிவிடும்.
வெற்றிக்கு என் பொறுப்பு
இப்படிச் சொல்வதால் நான் இன்னொரு கட்சிக்கு போய் விடுவேன் என்று அர்த்தமல்ல. ராமநாதபுரம் தொகுதியில் திமுக-வை ஜெயிக்க வைக்க வேண்டியது ரித்தீஷின் பொறுப்பு’ என்று சொல்லி தலைமை என்னிடம் பொறுப்பைக் கொடுத்தால் ஜெயிக்க வைத்துக் காட்டுவேன். தங்கவேலுவால் இப்படிச் சொல்ல முடியுமா? உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று அழகிரி எங்களுக்காக தலைமையிடம் முறையிட்டார். தென் மண்டல அமைப்புச் செயலாளரே அப்படிச் சொன்ன பிறகு மறுதேர்தல் நடத்துவதுதானே முறை. அதைச் செய்யாமல் அவரை கட்சியைவிட்டு நீக்கியுள்ளனர். எங்களுக்கு நியாயம் கேட்கப்போய் தன்னை பலியாக்கிக் கொண்டவரை விட்டுவிட்டு நாங்கள் எப்படி ஒதுங்க முடியும். அதனால்தான் அவருடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.