தமிழகம்

சென்னை கடலோரப் பகுதியில் 34,000 சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவல்: கடலோர காவல் படை தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில், வெளியான கச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதில், எர்ணாவூர் கடலோரப் பகுதியில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது.

இதனால் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் கசிவை நீக்க துரித நடவடிக்கையில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு கடலோர காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ரா கூறும்போது, "கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அளவை எங்களால் அளவிட முடியவில்லை. இதனை கப்பலின் உரிமையாளர்தான் கூற வேண்டும். இது அவர்களின் கடமை.

கச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளது. கடலில் கலந்துள்ள கழிவை சுத்தம் செய்ய நாங்கள் எந்த வேதியியல் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. ஒரு மாசை நீக்க மற்றொரு மாசுகேட்டை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமே எண்ணெய் நீக்கப்பட்டு வருகிறது.

ஒரு முறை கச்சா எண்ணெய் கடலின் மிகப் பெரிய பரப்பளவில் கலந்துவிட்டால் அதனை நீக்குவது கடினம்" என்றார்.

கடலில் பரவிய கச்சா எண்ணெய், பாலவாக்கம் வரை பரவியுள்ளதாக தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரை பொறுத்தவரை கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை நீக்க கேவிஎம் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி கூறும்போது,"கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை நீக்க எங்களது குழு விரைவாக செயல்பட்டு வருகிறது.சுமார் 20 டன் வரை கச்சா எண்ணெய் கடலின் பரப்பில் பரவி காணப்படுகிறது. விரைவில் நீக்கப்படும்" என்றார்.

தோலுக்கு தீங்கு:

கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் குறித்து வல்லுநர்கள் கூறும்போது, ”மக்கள் கடற்கரைக்கு வருவதற்கு அனுமதிக்கக் கூடாது. கச்சா எண்ணெய் கழிவு தோலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது" என்று கூறியுள்ளனர்,

SCROLL FOR NEXT