தமிழகம்

ஒலிம்பிக் நடை பந்தயத்தில் இன்று தங்கம் வெல்வாரா கணபதி?- ‘மண்ணின் மைந்தர்’ வெற்றியை கொண்டாட காத்திருக்கும் கிராம மக்கள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காடும், மலைகளும் சூழ்ந்துள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தில் இருந்து கணபதி (27) என்ற தடகள வீரர் இந்தியா சார்பில் பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். ராணுவ வீரரான இவர் இன்று நடைபெற உள்ள 20 கிமீ நடை பந்தயத்தில் பங்கேற்கிறார்.

கோனேகவுண்டனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை எம்.சி.பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கியும் படித்தார். விவசாய கூலி தொழில்செய்து வரும் இவரது பெற்றோர், போதிய வருமானம் இல்லாமல் இவரது படிப்புக்கு துணையாக இருக்க முடியவில்லை.

சிறுவயது முதலே விளை யாட்டில் ஆர்வம் கொண்ட கணபதி, உள்ளுரில் நடக்கும் கைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோப்பைகள், சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு 11-வது மதராஸ் படைப்பிரிவில், ராணுவத் தில் சேர்ந்த கணபதி, ஊட்டியில் பயிற்சி பெற்ற போது அவரது ஆர்வத்தையும், தனித்திறமையையும் கண்ட ராணுவ அதிகாரிகள் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கூடுதல் பயிற்சி அளித்தனர். கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விளையாட்டுபயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போலந்து நாட்டில் 3 மாதங்களாக தீவிர பயிற்சி பெற்றார்.

கணபதி ஒலிம்பிகில் தங்கம் வெல்வது உறுதி என அவரது பெற்றோர் கிருஷ்ணன் மாது ஆகியோர் பெருமையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘திருப்பதி, கணபதி, சக்திவேல் என எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கணபதி சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்தார்.

ராணுவத்தில் சேர்ந்த பிறகு எனது மகனின் திறமை வெளிப் பட்டது. ராணுவத்தில் சேர்ந்த 8 ஆண்டுகளில் வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்து 2 அல்லது 3 நாட்கள் தங்குவார். உணவு, தண்ணீர் பிரச்சினை காரணமாக ஊருக்கு வராமல் தொடர்பயிற்சியில் உள்ளதாக தெரிவிப்பார்.

ஊரில் இருக்கும் நாட்களிலும், அதிகாலை 4 மணியளவில் தனது தம்பி சக்திவேலை உடன் அழைத்துக் கொண்டு நடை பயிற்சிக்கு செல்வார்.

காட்டை ஒட்டிய பகுதி என்பதால், விலங்குகள் நடமாட்டம் இருக்கும். இதற்காக அவரது தம்பி இருசக்கர வாகனத்தில் முன்னே செல்ல, கணபதி வேகமாக நடந்து பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

தேசிய அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில்பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இதேபோல் ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற நடை போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள எனது மகனின் ஆர்வம், விடாமுயற்சி, குடும்ப அர்ப்பணிப்பு உள்ளிட்டவையால் நிச்சயம், நம்நாட்டிற்காக தங்கம் வெல்வது உறுதி’ என்றனர்.

குடும்பமே அர்ப்பணிப்பு

கணபதியின் அண்ணண் திருப்பதியும் ராணுவ வீரராக பணி யாற்றுகிறார். அவர் கூறுகையில், ‘கணபதியின் விளையாட்டு ஆர்வத்துக்கு நாங்கள் எப்போதும் தடையாக இருந்ததில்லை. குடும்ப வறுமை நிலையிலும், எங்களை பெற்றோர் பிளஸ் 2 வரை படிக்க வைத்தனர். தடகள போட்டியில் பயிற்சி எடுத்தால் அதற்காக செலவு அதிகமாகும் என கவலை அடைந்த எனது தம்பிக்கு, ‘வீட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,விளையாட்டில் நீ கவனம் செலுத்து ’ என நாங்கள் அனைவரும் ஊக்கமும், தன்னபிக்கையும் அளித்தோம். எனது தம்பி சாதிக்க வறுமை ஒரு தடையாக அமைந்துவிட கூடாது என்பதற்காக அவருக்கு தேவையான பண உதவியை நானும், எனது பெற்றோரும் செய்து வருகிறோம்.

கணபதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை சக ராணுவ வீரர்களுடன் ரசித்துக் காண ஆவலுடன் உள்ளேன்’ என்றார்.

கிராமத்தினர் கொண்டாட்டம்

கோனேகவுண்டனூர் கிராம மக்கள் கூறும்போது, ‘எங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்த கணபதி, நம் நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. கணபதி வெற்றி பெறுவதை பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலாக உள்ளோம். அனைத்து மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.கணபதியை வாழ்த்தி பேனர்கள், போஸ்டர்கள் தயாரித்து வருகிறோம்’ என்றனர்.

கர்நாடகாவில் வாய்ப்பு

ராணுவ முகாமில் பயிற்சி பெற்ற கணபதி முதன்முறையாக தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே லட்சியத்துடன் கர்நாடகா அணி சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT