மாநகராட்சி அலுவலர்கள் போல் நடித்து வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடும் கும்பல் நடமாட்டம் திருநெல்வேலியில் அதிகரித்திருக்கிறது.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அழகர் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்துக்குப்பின் , போலீஸாரின் தீவிர சோதனையால் பெருமளவு திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் திருநெல்வேலியில் குறைந்திருந்தன. தற்போது நூதன முறையில் கைவரிசை காட்டும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நகைகள் திருட்டு
கடந்த வாரம் கே.டி.சி. நகர் காமாட்சி நகர் 1-வது தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் ஞானசுந்தரம் (70) என்பவரது வீட்டுக்கு 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை மாநகராட்சி அலுவலர்கள் என்றும், கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அப்போது ஞானசுந்தரத்தின் மனைவி மட்டும் இருந்தார். அவருடன், பேச்சுக்கொடுத்துக் கொண்டே வீட்டு கட்டுமானத்தை ஆய்வு செய்வதுபோல் 5 பேரும் நடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் வீட்டின் பின்புறம் சென்று பார்வையிட்டனர். அவர்கள் கேட்ட விளக்கங்களை ஞானசுந்தரத்தின் மனைவி சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் கும்பலில் உள்ள மற்ற இருவரும் வீட்டினுள் புகுந்து பீரோவைத் திறந்து 20 பவுன் நகைகளை எடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த 5 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நகைகள் திருடப்பட்டது குறித்து ஞானசுந்தரத்தின் மனைவிக்கு எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.
ஞானசுந்தரம் வீட்டுக்கு வந்ததும் 5 பேர் வந்ததை அறிந்து, சந்தேகத்தில் பீரோவை பார்த்தபோது நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை விசாரிப்பதாக தெரிவித்து இழுத்தடித்துள்ளனர்.
திருட முயற்சி
இச்சம்பவம் நடைபெற்ற இரு நாட்களில் வண்ணார்பேட்டை, இந்திரா நகர் பகுதியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சண்முகசுந்தரத்தின் வீட்டுக்கு 2 பேர் வந்துள்ளனர். தங்களை மாநகராட்சி அலுவலர்கள் என்று தெரிவித்த அவர்கள், வீட்டுக்கு வரி விதிப்பு குறித்த ஆய்வுக்காக வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
சண்முகசுந்தரத்திடம் பேச்சுக்கொடுத்து கொண்டே, வீட்டின் அளவுகளை காகிதத்தில் குறித்தபடி, வீட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு, சண்முகசுந்தரம் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘எதுவானாலும் மாநகராட்சிக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்வேன்’ என்று, தெரிவித்திருக்கிறார். சண்முகசுந்தரம் உஷாராக இருப்பதை தெரிந்துகொண்ட இரு நபர்களும், மோட்டார் சைக்கிளில் நழுவிச் சென்றுவிட்டனர்.
நோட்டமிடும் கும்பல்
திருநெல்வேலியில் வீடுகளுக்குள் புகுந்து நூதனமாக திருடும் கும்பல் நடமாட்டம் குறித்து பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் தரப்பில் புகார் வருகிறது. ஓய்வுபெற்றவர்கள் தனியாக இருக்கும் வீடுகளை முன்கூட்டியே நோட்டமிட்டு இந்த கும்பல் களமிறங்குகிறது. வீட்டில் தனியாக இருக்கும் ஓய்வூதியர்களிடம் தங்களை மாநகராட்சி அலுவலர்களாக அறிமுகம் செய்து கொண்டு, தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர்.
இக் கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க மாநகர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நேரடி வரிவசூல் கிடையாது
மாநகராட்சி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கு இப்போது நேரடியாக யாரும் வரி வசூலிக்கச் செல்வதில்லை. இதற்கென செயல்படும் வரிவசூல் மையங்களில்தான் வரி செலுத்த வேண்டும். குப்பைகளை சேகரிக்க காலை நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் வீடுகள்தோறும் செல்கிறார்கள். அவர்களும் வீடுகளுக்குள் செல்வதில்லை. மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வார்கள். அதுவும் 4 அல்லது 5 பேர் மாநகராட்சி வாகனங்களில்தான் ஆய்வுக்கு செல்வார்கள். எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிடலாம். சந்தேகப்படும் நபர்கள் வருகை குறித்து காவல்துறைக்கு புகார் செய்யலாம்” என்று தெரிவித்தார்.