தமிழகம்

மாயமான ஆட்டோ மீட்டர் திட்டம்

விவேக் நாராயணன்

சென்னை மாநகரில் ஒரு ஆட்டோவில் ஏறி 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சென்றால் போதும், ஆட்டோகாரருக்கு ரூ.100 கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அந்த ஆட்டோவில் மீட்டர் மட்டும் பொருத்தப்பட்டிருந்தால், ரூ.50 அல்லது அதற்குக் குறைவாகவே கொடுத்திருக்கலாம்.

சென்னையில், திடீரென சூடு பிடித்த ஆட்டோ மீட்டர் பொருத்தும் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அரசும், அது வாக்களித்ததுபோல் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட மீட்டர்களை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்குவது தொடர்பாக மூச்சு விடுவதாக இல்லை. இதனால், பாதிக்கப்படுவது என்னவோ பயணிகள் தான். அதுவும் குறிப்பாக புறநகர்வாசிகள்.

சென்னை மாநகர் முழுவதும் 70,000 ஆட்டோக்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில அரசு ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கியது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸாரும், ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என்ற சோதனையில் விறுவிறுப்பாக இறங்கினர்.

ஆட்டோ மீட்டர்கள் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக சில ஹெல்ப்லைன் நம்பர்களையும் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியது (044-26744445 மற்றும் 24749001). ஆட்டோக்களை கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆட்டோ மீட்டர் பொருத்தாமல், விதிமுறைகளை மீறிய சுமார் 3000 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், அண்மைக்காலமாக ஆட்டோ மீட்டர்கள் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை. ஆட்டோக்காரர்களிடம் கேட்டால், "ஷேர் ஆட்டோக்களும், கால் டாக்ஸிகளும் எங்கள் வருமானத்தை குறைத்திருப்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்" என்கின்றனர்.

மெட்ராஸ் மெட்ரோ ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெ.ஷேசயனம் கூறும்போது, "சென்னை நகரில் ஆயிரக்கணக்கில் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன ஆனால் அவற்றில் வெறும் 150 மட்டுமே முறையான உரிமம் பெற்றவை. கால் டாக்ஸிகள், ஆட்டோக்கள் கட்டணத்திலேயே இயங்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அரசு ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.30 ஆக அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான கட்டணத்தையும் ரூ.15 ஆக உயர்த்த வேண்டும். எரிபொருள் விலை சீராக இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பயணிகள் சிரமம் குறைவது எப்போது?

தமிழில்: பாரதி ஆனந்த்

SCROLL FOR NEXT