தமிழகம்

அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு பால் விலை உயர்வு: கருணாநிதி கண்டனம்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் வரலாற்றிலேயே இது வரை எந்தவொரு அரசும் ஒரே நேரத்தில் பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் அளவுக்கு உயர்த்தியதே கிடையாது என பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தின் வரலாற்றிலேயே இது வரை எந்தவொரு அரசும் ஒரே நேரத்தில் பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் அளவுக்கு உயர்த்தியதே கிடையாது. 'கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையிலே வை' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல தமிழகத்தில் எத்தனையோ அவசரப் பிரச்சினைகள் இருந்த போதிலும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், அ.திமு.க. அரசு இன்றைய தினம் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது.

1991-1996ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பசும்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 26 காசு என்ற அளவுக்கு உயர்த்தி விட்டு, நுகர்வோரிடம் அதை விட அதிகமாக லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று பால் விலையை உயர்த்தினார்கள்.

14-2-2011 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் "பால் தட்டுப்பாட்டினை உருவாக்கி, தட்டுப்பாடுகளை உருவாக்கும் தறிகெட்ட அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. பால் உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு வழிப்பறி கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது"என்றெல்லாம் வாய் சவடால் விட்டார்.

ஆனால் இப்போது இந்த ஆட்சியில் என்ன ஆயிற்று? பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசாமல், போராட நினைத்த அவர்களை அச்சுறுத்தி அடக்கி விட்டு, தன்னிச்சையாகவே கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே உயர்த்தி விட்டு ; விற்பனை விலையை மட்டும் இரண்டு மடங்காக அதாவது லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்கள்.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 1-9-2009 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 13.45லிருந்து ரூ. 15.64 ஆகவும், எருமைப் பால் விலையை 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் - அதன் பின் 5-1-2011இல் பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 15.64 லிருந்து ரூ. 16.64 ஆகவும், எருமைப் பால் விலையை 23 ரூபாயிலிருந்து ரூ. 25.20 ஆகவும் - 16-2-2011 அன்று பசும்பாலின் கொள் முதல் விலையை ரூ. 16.64லிருந்து 18 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை ரூ. 25.20லிருந்து 26 ரூபாயாகவும் அதிகப்படுத்திக் கொடுத்த போதிலும், அதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 17.75 என்பதிலிருந்து ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதும், "விலைவாசியை நான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன்" என்று கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒரே நேரத்தில் பாலின் விலையை ஏற்கனவே லிட்டர் ஒன்றுக்கு 6.25 உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தற்போது லிட்டர் ஒன்றுக்கு பாலின் விலையை ரூபாய் 24 என்பதிலிருந்து ரூபாய் 34 ஆக உயர்த்தி ஏழையெளிய, நடுத்தர குடும்பங்களிடமும், அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடமும் தங்களுக்குள்ள காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அண்மையில் ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழலை அப்படியே மறைத்து விட்டு, அந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பாலின் விற்பனை விலையை ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் என உயர்த்தி, சாதாரண பொதுமக்கள் தலையில் அந்தச் சுமையை ஏற்றியிருப்பதை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த விற்பனை விலை உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT