தமிழகம்

விரைவில் நலம் பெற்று வருவேன்; பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன்: கமல்ஹாசன் வாட்ஸ்-அப்பில் உருக்கம்

செய்திப்பிரிவு

பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று. விரைவில் நலம் பெற்று வருவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். இதில் தனது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கமல்ஹாசனுக்கு டாக்டர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஓய்வு எடுத்து வரும் கமல்ஹாசன் விரைவில் நலம் பெற்று வருவேன் என்று ரசிகர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வாட்ஸ்-ஆப்பில் பேசியதாவது:

என்பால் எப்போதும் என் நிலையிலும் அன்பு காட்டும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி பல. எனக்கு சிறு விபத்தோ, ஆபத்தோ ஏற்பட்டால் கூட கேள்விகள் பலவற்றுடன் வீறுகொண்டு எழுந்து என்னை காக்க எனக்கும் முன்னால் நின்று இவர்கள் காட்டும் அன்பை நான் பார்த்து வியப்பதென்று நான் என்ன செய்ய. இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை. பதிலுக்கு அன்பும், என் கலையும், அதை செய்ய நான் ஏற்ற பல பாத்திரங்களும் தான். எனக்கு நடக்கும் நல்லதோ, கெட்டதோ உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிகளும், விபத்துகளும் எனக்கு விசித்திரமல்ல. சில இடர்களை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று.

ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில், இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான். ஆனால் நல்ல மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும், என் சிறு குடும்பமும் உடன் இருக்க, எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம் பெற்று வருவேன்.

எப்படி இருக்கீங்க? எப்ப பார்க்கலாம்? என்று கேள்விகளை கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் தம்பிக்கு, அண்ணனுக்கு, அப்பனுக்கு, தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம் பெற்று திரும்புவேன்.

எழுந்து அமர்ந்து இக்கடிதத்தை எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன். அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லா உங்கள் அன்பன் கமல்ஹாசன்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT