கடந்த 2016-17ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய பணிகள், புதிய துணைப் பணிகளுக்காக இறுதி துணை மதிப்பீடு மூலம் ரூ.4,796 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:
2016-17ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், புதிய பணிகள், புதிய துணைப் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை நிதிக்கு ஈடு செய்வதும் துணை மானியக் கோரிக்கையின் நோக் கம். இதற்கான இறுதி துணை மதிப்பீடுகள், ரூ.4,796 கோடியே 58 லட்சத்தை ஒதுக்க வழிசெய்கிறது. இதில் ரூ.4,121 கோடியே 49 லட்சம் வருவாய் கணக்கிலும், ரூ.675 கோடியே 9 லட்சம் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
இதன்படி, வறட்சி நிவாரணத் துக்காக பயிரிழப்பால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியத்துக்காக ரூ.2,247 கோடியே 7 லட்சம், கால்நடை தீவனத்துக்காக ரூ.6 கோடியே 91 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.53 கோடி, நபார்டு வங்கி உதவியுடன் கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி, நகர்ப்புறத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை செயல்படுத்த ரூ.183 கோடியே 54 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மாநில போக்குவரத்துக் கழகங் களுக்கு டீசல் மானியமாக ரூ.155 கோடியே 48 லட்சத்துக்கு பதில், ரூ.141 கோடியே 97 லட்சம் ஒதுக்கப்படுகிறது. புதுக்கோட்டை யில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு ரூ.40 கோடிக்கு பதிலாக ரூ.28 கோடியே 49 லட்சம் ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து பெறப்படும்.
புதிய பணிகள், புதிய துணைப் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை நிதிக்கு ஈடு செய்வதும் துணை மானியக் கோரிக்கையின் நோக்கம்.