திண்டிவனத்தில் ரியல் எஸ்டேட் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திண்டிவனம் சர்க்கார் தோப்பு பகுதியில் வசித்தவர் பொன் .குமார் (50). திமுக மாவட்ட பிரதிநிதியாகவும், புறங்கரை கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி சுமதி (45), மகன் தினகரன்(25) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். மகள் சண்முகபிரியா(18) 12-ம் வகுப்பு மாணவி. இவர்கள் 4 பேரும் நேற்று இரவு சுமார் 11.30 மணிக்கு ஒரே நேரத்தில் விஷம் அருந்தி மயங்கியுள்ளனர்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பொன்.குமார், சுமதி, சண்முகபிரியா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தினகரன் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து 4 பேரின் உடலும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் ஏற்பட்ட பிரச்சினையால் பொன்.குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.