தமிழகம்

பாரம்பரிய முறையில் மர செக்கு எண்ணெய்: இலவசமாக பயிற்சியளிக்கும் சகோதரர்கள்

ஜெ.ஞானசேகர்

உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், எண்ணெய் ஆட்டுவதற்கு மரத்திலான செக்கைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்கின்றனர் திருச்சியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர்.

திருச்சி தாராநல்லூர் எஸ்.வி.ஆர். கார்டன் பகுதியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட சிறிய கட்டிடத்தில் மரத்திலான செக்கு வைத்துள்ள பட்டதாரி இளைஞர் எஸ்.அகஸ்டின் ராஜா.இவரது தம்பி எஸ்.ஜான்பால் ராஜீவ்.

சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான செய்திகள் மீது ஆர்வம் பிறந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களைச் சேகரித்த அவர்கள், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெய் உற்பத்தி செய்ய முடிவெடுத்தனர். பாரம்பரிய முறையில் மரத்திலான செக்கில் எண்ணெய் பிழிவதுதான், இதற்குத் தீர்வு என்று தீர்மானித்தனர்.

இதையடுத்து, கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறிய கட்டிடத்தில் மர செக்கு அமைத்து, எள் மற்றும் கடலையைப் பிழிந்து, எண்ணெய் எடுத்து வணிகம் செய்து வருகின்றனர்.

சந்தையில் விற்பனையாகும் பிற சமையல் எண்ணெய் விலையைவிட கூடுதல் விலையாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு, வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அகஸ்டின் ராஜா கூறியது: உயிர்ச் சத்துகள் இல்லாத எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தும்போது, உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். அதேபோல, இயந்திரங்களால் அதிவேகத்தில் பிழிந்தெடுக்கப்படும் எண்ணெயில், உயிர்ச் சத்துகள் இல்லாத நிலையில், அவை அதிகம் சூடாக்கப்படும்போது ரசாயனக் கலவையாக மாறுகிறது. இதனால், மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை அப்படியே பயன்படுத்தினர். உடற்பயிற்சி முடிந்ததும் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவேதான், நாங்களும் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில் மரத்திலான செக்கு அமைக்க முடிவு செய்தோம். வேம்பு மரத்தில் உலக்கையும், வாகை மரத்தில் உரலும் கொண்ட செக்கு அமைத்து, மின் மோட்டார் உதவியுடன் செக்கை இயக்கி வருகிறோம். இரண்டரை கிலோ கடலையைப் பிழியும்போது சுமார் 1 லிட்டர் முதல் 1.25 லிட்டர் வரைதான் எண்ணெய் கிடைக்கும். அதேபோல, எள்ளை ஆட்டும்போதும் அதே அளவு எண்ணெய்தான் கிடைக்கிறது.

எனவேதான், முதலீட்டுக்கு ஏற்ப, சொற்ப லாபத்தில் விற்பனை செய்து வருகிறோம். இயந்திரத்தில் எண்ணெய் பிழியும்போது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்துவிடுவதால், அதில் கிடைக்கும் புண்ணாக்கில் உயிர்ச் சத்துகள் மிஞ்சாது. ஆனால், மர செக்கில் மெதுவாக எண்ணெய் பிழிவதால், 80 சதவீதம் மட்டுமே எண்ணெய் கிடைக்கிறது. இதனால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அதிகமிருக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும் உயிர்ச் சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

மரத்திலான செக்கைப் பயன்படுத்தி, எண்ணெய் ஆட்டும் முறை குறித்து இலவசமாக கற்றுத் தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற சிலர், சென்னை உள்ளிட்ட இடங்களில் விரைவில் மரத்திலான செக்கு அமைக்க உள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT