புதுக்கோட்டையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பருக்கு கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்த நிலையில், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதை மனித உரிமை மீறல் செயலாகக் குறிப்பிட்ட, உயர் நீதிமன்ற அமர்வு இருவரையும் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கீழவாண்டான் விடுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவரை கத்தியால் குத்தியதாக ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலின் ஆசிரியர் துரைகுணா, பூபதி கார்த்திகேயன் ஆகியோரை கறம்பக்குடி போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இருவரையும் ஆஜர்படுத்தக்கோரி புகார்தாரர் சிவானந்தம், உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இருவர் மீது தான் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. தன்னை யாரும் கத்தியால் குத்தவில்லை. துரை குணா யாரென்றே தனக்குத் தெரியாது எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எழுத்தாளர் உள்பட இருவரின் ஜாமீன் மனுவை ஆலங்குடி நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இந்த வழக்கில் இருவருக்கும் ஆலங்குடி நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் 2015-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரை தாக்கிய வழக்கில் இருவரையும் போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரத்தினம் வாதிட்டார். விசாரணைக்குப்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
2015-ல் பதிவான வழக்கில் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற நபர்களைக் கைது செய்யவில்லை. சிவானந்தம் வழக்கில் ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து விடுதலையாகும் நிலையில் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து, இருவரும், விடுதலை ஆகக்கூடாது என்பதில் போலீஸார் தீவிரமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. மனித உரிமை, நீதியின் நலன் கருதி இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. இருவரையும் விடுதலை செய்ய வேண்டும். இருவரும் ஒரு மாதத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் ஆலங்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும். ஜூன் 20-ல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.