தமிழகம்

மாணவர்கள் போராட்டத்தால் கிடைத்த வரவேற்பு: காளை மாடுகள் விலை உயர்வு

ஜெ.ஞானசேகர்

மாணவர்கள் தொடர் போராட்டத்துக்குப் பின், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளதால் காளைகளின் விலையும் உயர்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு நடத்திய போராட்டம், நாட்டையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, சட்டப்பேரவையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதனால், ஜல்லிக்கட்டுக்கு இனி தடை வராது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால், தற்போது மாட்டுச் சந்தைகள் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் டி.ராஜேஷ் கூறியதாவது: தமிழ்நாட்டில் பால், உரம் உட்பட பல்வேறு காரணிகளில் பெரிய விற்பனை சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கு முதலில் பாரம்பரிய நாட்டின மாடுகளை ஒழிக்க வேண்டும் என்று வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் மறைமுகமாக செயல்பட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், மாணவர்களின் தொடர் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு வெற்றியை அளித்துள்ளது. மேலும், மக்களிடம் அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக மாட்டுச் சந்தைகள் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன. காளைகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காளை ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகிறது. ஜல்லிக்கட்டில் நன்றாக பாயும் காளைகளை விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வாங்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் சந்தைகளில் காளைகள் விற்பனைக்கு கிடைக்கவில்லை” என்றார்.

பாலுக்கும் வரவேற்பு

ஜல்லிக்கட்டு தடைக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ‘பீட்டா’ அமைப்பே காரணம் என்று கூறி, வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் வழி யாக மாணவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டனர். இதன் பலனாக நாட்டின பசுக்களின் பாலுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக கடந்த 23 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வரும் புங்கனூரைச் சேர்ந்த சக்திவேல் கூறும்போது, “மாணவர் போராட்டத்துக்குப் பிறகு நாட்டின பசும்பால் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT