சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே அமைக்கப்படவுள்ள பறக்கும் சாலைத் திட்டம் தொடர்பாக வல்லுநர் களின் கருத்தைக் கேட்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகத்துக்கும் மதுரவாயலுக்கும் இடையே 19 கி.மீ. தூரம் பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு தற்போது ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
இத்திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் எச்.எல்.கோகலே, ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னர் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் “இத்திட்டத்துக்காக கூவம் ஆற்றின் நடுவே தூண்களை அமைப்பதால், நீரோட்டத்துக்கு தடை ஏற்பட்டு மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுவது தொடர்பாக வல்லுநர்களின் கருத்தை கேட்க வேண்டும். அவர்களின் கருத்துகளைத் தொகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், “இத்திட்டம் தொடர்பான உங்களின் அரசியல் சண்டையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
அதற்கு பதிலளித்த ரோஹத்கி, “நாங்கள் இத்திட்டத்தை எதிர்க்கவில்லை. பறக்கும் சாலைத் திட்டத்துக்காக கூவம் ஆற்றின் நடுவே 32 தூண்களை அமைத்தால், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.
வாஹன்வதி கூறுகையில், “சாலையின் 800 மீட்டர் நீளத்துக்குத்தான் ஆற்றில் தூண்கள் அமைக்கப்படுகிறது. இதனால் வெள்ளம் ஏதும் ஏற்படாது” என்றார்.
வில்சன் கூறுகையில், “இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதிப்பு ஏதும் இல்லை என்ற வல்லுநர்களின் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் வல்லுநர்களின் கருத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.