சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், பெண்மை யைப் போற்றுதல், எல்லா ஜீவராசிகளையும் பேணுதல் உட்பட மொத்தம் 6 கருத்துகளை வலியுறுத்தி இக்கண்காட்சி நடத் தப்படுகிறது.
பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை மற்றும் இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி வரும் 8-ம் தேதி திங்கள் கிழமை (நாளை) வரை நடக்க உள்ளது.
கண்காட்சியின் 4-வது நாளான நேற்று ‘எல்லா ஜீவராசிகளையும் பேணுதல்’ என்ற கருத்தை முன்வைத்து பசுவைப் போற்றுதல், யானையைப் போற்றுதல், துளசி செடிக்கு வணக்கம் செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், 10 ஆயிரம் பேருக்கு துளசி செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
தினமும் 40,000 பேர் வருகை
ஆன்மிகம் என்ற தலைப் பில் சித்தர்பாடல்கள், பன்னிரு திருமுறை, திருவருட்பா, திருவெம் பாவை, திருப்பள்ளியெழுச்சி, பாரதியார் பாடல்கள் ஒப்பிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் வட்டப் பல்லாங்குழி, கொம்பு வரைதல், நெல்லிக்காய் விளையாட்டு, ஐந்து பந்து போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. நேற்று விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும், குழந்தைகளுடன் பெற்றோரும் அதிக அளவில் கண்காட்சிக்கு வந்திருந்தனர். சராசரியாக தினமும் 40 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கண்காட்சி அரங்குகளை சுமார் ஒரு மணிநேரம் சுற்றிப் பார்த்தார். அரங்குகளின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்தார்.
முன்னதாக அமைச்சர் அனில் மாதவ் தவே பேசும்போது, ‘‘ஆன்மிக கண்காட்சியில் எல்லா ஜீவராசிகளையும் பேணுதல் என்ற கருத்தை முன்வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது சிறப்பு. மனிதர்களுக்கு பசு மிகவும் பய னுள்ளதாக இருக்கிறது. இது போல, யானையும் அன்பு கொண்ட விலங்கு. துளசி செடியில் இருந்து இலை, விதை, வேர் உட்பட 5 வகையான பொருட்கள், மனித னின் உடல்நலம் காக்க பயன் படுத்தப்படுகிறது. சில நேரங் களில் மருந்தாகவும் பயன் படுத்துகிறோம். உலகம் அமை தியை வேண்டுகிறது. ‘வாழுங்கள், வாழவிடுங்கள்’ என்பதே நம் நாட்டின் தத்துவம். இதை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
இந்து ஆன்மிக மற்றும் சேவை மையத்தின் துணைத் தலைவர் ராஜலட்சுமி, பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை அறங்காவலரும், டிஏவி பள்ளி நிறுவனருமான எஸ்.வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.