தமிழகம்

இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சியில் பெண்மையைப் போற்றும் ‘கன்யா வந்தனம்’: 1,000 பெண் குழந்தைகளுக்கு பாதபூஜை

செய்திப்பிரிவு

மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி யில் நடந்துவரும் இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் 3-ம் நாளான நேற்று பெண்மை யைப் போற்றும் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி நடந்தது. இதில், பல பள்ளிகளில் இருந்து வந்திருந்த 1,000 பெண் குழந்தைகளுக்கு 1,000 மாணவர்கள் பாதபூஜை செய்து, பெண்மையைப் போற்று வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம், பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி மைய அறக்கட்டளை ஆகியவை சார்பில் இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 6 கருத்துகள் அடிப்படையில் 6 நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளில் சுற்றுச்சூழல் பராமரிப்பை வலியுறுத்தும் வகையில் ‘கங்கா, பூமி வந்தனம்’ நிகழ்ச்சியும், 2-ம் நாளில் பெற்றோர், ஆசிரியர், பெரியோரை வணங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ‘ஆச்சார்ய வந்தனம்’ நிகழ்ச்சியும் நடந்தது.

3-ம் நாளான நேற்று பெண் மையைப் போற்றும் வகையில் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம், மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலாளர் எம்.விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,000 பெண் குழந்தைகள் வந்திருந்தனர். அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு இருக்கையில் அமரவைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் 1,000 பேர் அவர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்தனர். தெய்வத்தை வணங்குவதுபோல பெண் குழந்தைகளை இருகரம் கூப்பி வணங்கிய மாணவர்கள், அவர்களது காலில் தண்ணீர் தெளித்து, மஞ்சள், குங்குமம் வைத்தனர். பூக்கள், அட்சதை தூவி, பாத பூஜை செய்தனர்.

பின்னர், பெண்மையைப் போற்றும் வகையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி மைய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி உறுதிமொழியைக் கூற, மாணவர்கள் அனைவரும் அதை திருப்பிச் சொல்லி உறுதியேற்றனர்.

‘‘பெண்களையும், பெண் குழந்தைகளையும் தெய்வ வடிவமாகப் பாவித்து பக்தியோடு நடந்து கொள்கிறோம்’’ என்று அவர்கள் உறுதி ஏற்றனர். முதிய வர்களைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் களுக்கும் மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.

8-ம் தேதி வரை

மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்துவரும் இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி வரும் 8-ம் தேதி (திங்கள்கிழமை)நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT