தமிழக முதல்வர் விவகாரத்தில் இன்று முடிவு எடுக்காவிட்டால் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனாலும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி பேசி வந்தார். சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் காலதாமதம் செய்து வருவதாகவும் விமர்சித்தார். இதனிடையே, சென்னை ராஜ் பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சுப்பிரமணியன் சுவாமி, நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். ஆளுநரை மரியாதை நிமித்தமாக சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சட்டப்பிரிவு 32-ன் படி
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழக முதலமைச்சர் விவகாரத்தில் ஆளுநர் நாளைக்குள் (இன்று) முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், காலம் தாழ்த்துவது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்ற புகாரின் பேரில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 32-ன் படி வழக்கு தொடரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.