தமிழகம்

தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: சோதனைச் சாவடி எரிப்பு; 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச் சாவடி எரித்த வழக்கில், 50க்கும் மேற்பட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேட்டூரை அடுத்த தமிழக எல்லையில் கோவிந்தபாடி கிராமம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த ராஜா (32), செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி (40), காரைக்காடு கிராமத்தை சேர்ந்த முத்துசாமி (47) ஆகியோர் கடந்த 21-ம் தேதி இரவு வேட்டையாட துப்பாக்கியுடன் கர்நாடகாவில் உள்ள பாலாறு வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, கர்நாடக வனத்துறையினருக்கும், வேட்டை கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், காலில் குண்டு காயத்துடன் ராஜா தப்பினார். அவரை முத்துசாமி அழைத்து வந்து, கோவிந்தபாடி கிராமத்தில் விட்டுவிட்டு, தலைமறைவாகிவிட்டார். ஆனால், அவர்களுடன் சென்ற பழனி பற்றிய தகவல் தெரியவில்லை.

கிராம மக்களின் புகார் அடிப்படையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி வேல் மற்றும் உயர் அதிகாரிகள் கோவிந்தப்பாடி கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பழனியின் உடல் கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாற்றில் நிர்வாண நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சேலம் சரக டிஐஜி வித்யாகுல்கர்னி, காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் போலீஸார் அங்கு சென்றனர். அவரது கை துண்டிக்கப்பட்டும், தலையில் குண்டடிபட்ட அடையாளமும் இருந்ததாகத் தகவல் பரவியது.

இதனால், கோபமடைந்த கிராம மக்கள் கர்நாடக வனத்துறையின் சோதனைச்சாவடியை சேதப் படுத்தி, தீ வைத்துள்ளனர். பழனியின் உடல் கிடந்த அடிப்பாலாறு, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும்.

எனவே, அவரது உடலை, மாதேஸ்வரன் மலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக, மைசூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று பழனியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது உடலை எடுத்து வரும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், முன்கூட்டியே இரு மாநில எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

வனத்துறை மீது புகார்

கொலை செய்யப்பட்ட பழனியின் மனைவி மாதேஸ்வரன் மலை போலீஸில் கர்நாடக வனத் துறையினர் மீது புகார் செய்துள் ளார். பதிலுக்கு கர்நாடக வனத் துறையினர் தமிழக எல்லையோர கிராம மக்கள் மீது போலீஸில் புகார் செய்துள்ளனர்.

சோதனைச்சாவடியை எரித்ததா கவும், துப்பாக்கி, லேப்டாப் காண வில்லை எனவும் 50க்கும் மேற்பட்ட தமிழக கிராம மக்கள் மீது கர்நாடக வனத்துறை அளித்த புகாரின் பேரில், மாதேஸ்வரன் மலை போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பதற்றம் காரணமாக மாதேஸ் வரன் மலைக்கு இயக்கப் பட்ட தமிழக அரசு போக்குவரத் துக்கழகத்தின் 17 பஸ்களும் நிறுத்தப்பட்டன. மைசூர், கொள்ளே கால் பகுதியில் இருந்து சேலம், ஈரோடு, மேட்டூருக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்கள் இரண்டாவது நாளாக நேற்றும் நிறுத்தப் பட்டன.

8 கி.மீ. நடைப்பயணம்

எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், 8 கி.மீ., தொலைவுக்கு மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகினர். தமிழக -கர்நாடக எல்லையில் ஏற்பட்டுள்ள தொடர் பதற்ற நிலையை அடுத்து, கர்நாடக மாநில தெற்கு சரக ஐ.ஜி. விஜயேந்திரகுமார் சிங் அங்கு விரைந்துள்ளார்.

SCROLL FOR NEXT