லால்குடி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கீழரசூர் கிராமத்தில் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடை பெற்றது. 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை ஏராளமான இளைஞர்கள் விரட்டிச் சென்று அடக்கினர். இதைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர்.
தகவலறிந்த லால்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் கல்லக்குடி போலீஸார் அங்கு சென்று ஜல்லிக்கட்டைத் தடுக்க முயற்சித்தனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லேசான தடியடி நடத்தியதால் பொதுமக்களில் சிலர் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தி னர். இதில், 4 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், காவல் துறையின் 2 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதற்கிடையே ஜல்லிக்கட்டைத் தடை செய்ததைக் கண்டித்தும், பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும் திருச்சி - சிதம்பரம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி நடராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.