தமிழகம்

நெய்வேலி புதிய மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு 135 மெகாவாட் ஒதுக்கீடு: மத்திய மின்சார ஆணையம் உத்தரவு

ஹெச்.ஷேக் மைதீன்

நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்கம் புதிய மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 135 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் சார்பில் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 4,346 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சுரங்க வளாகத்தில் இரண்டாம் நிலை விரிவாக்க சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்த, புதிதாக இரண்டாம் நிலை விரிவாக்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் 2 அலகுகளில் தலா 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. நெய்வேலி நிலையத்தில் முதல்முறையாக பழுப்பு நிலக் கரியைப் பயன்படுத்தி 250 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மின்னாக்கி மற்றும் பாய்லர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம் 7 ஆண்டுக ளுக்கு முன்பு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டிலேயே பணி களை முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கருவிகள் கிடைக்காதது போன்ற பிரச்சினைகளால் தாமதம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, இந்த மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. முதலில் 150 மெகாவாட்டில் மின் உற்பத்தி துவங்கி, படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 25-ம் தேதி 250 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகி முழு இலக்கும் அடைந்தது.

ஏப்ரல் முதல் நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்க நிலையத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இந்த நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து மத்திய மின்சார ஆணையம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கர்நாடகத்துக்கு 25.88 சதவீதம் (64.7 மெகாவாட்), கேரளா வுக்கு16.47 சதவீதம் (41.18 மெகா வாட்), தமிழகத்துக்கு 54.12 சதவீதம் (135.30 மெகாவாட்) மற்றும் புதுவைக்கு 3.53 சதவீதம் (8.82 மெகாவாட்) மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழகத்துக்கு 1,234 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. கூடங் குளம், கைகா, கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு மத்திய மின் நிலையங் களிலிருந்து, 4,211 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT