இயற்கை விவசாயம் மூலம் தென்னை, மா, சப்போட்டா மரங்கள் வளர்த்து நல்ல மகசூல் எடுத்து வருகிறார் சிதம்பரம் பொறியாளர். மேலும் தூய தேங்காய் எண்ணெய் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவும் முயற்சி செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜேந்திரன். பொறியாளரான இவர் இயற்கை விவசாயம் செய்வ தற்காக சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே உள்ள முத்தூர் வாணியங்குடியில் 30 ஏக்கர் நிலத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கியுள்ளார்.
இவரும், இவரது மனைவி மணிமேகலையும் தொடர் உழைப்பால் இந்த நிலத்தை தற்போது செழிப்பான வளம் நிறைந்த மண்ணாக மாற்றி யுள்ளனர். இதில் இயற்கை விவசாயம் மூலம் தென்னை, மா, சப்போட்டா மரங்கள் வளர்த்து நல்ல மகசூல் பார்த்து வருகிறார். தூய தேங்காய் எண்ணெய் தயாரித்து அமெரிக்காவுக்கு அனுப்பும் முயற்சியிலும் இறங்கி யுள்ளார்.
இது குறித்து எஸ்.ராஜேந்திரன்(61), `தி இந்து’விடம் கூறியதாவது:
எனது சொந்த ஊர் காளையார் கோவில் அருகே உள்ள காளக்கண்மாய். காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு சுமார் 40 ஆண்டுகளுக்குமுன் வேலைக்காக சிதம்பரம் சென்றேன். எஸ்ஆர் கன்சல்டன்ஸி நிறுவனம் மூலம் பெரிய நிறுவனங்களுக்கு கட்டுமான வேலை பார்த்துள்ளேன். பல வெளிநாடுகளிலும் பணியாற்றி யுள்ளேன்.
அடிப்படையில் விவசாயக் குடும்பம் என்பதால் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்து, முத்தூர் வாணியங்குடியில் நிலத்தை வாங்கினோம். இயற்கை விவசாயம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் பல மாநிலங்களுக்குச் சென்று அனுபவங்களைப் பெற்றோம். சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் தொழில்நுட்பக் கழகம் மூலம் இயற்கை விவசாயம் குறித்து அறிந்தோம். சிவகங்கை அசேபா தொண்டு நிறுவனம் மூலம் பல பயிற்சிகளைப் பெற்றோம். 2005-ல் இயற்கை விவசாயிகள் முன்னோடி சங்கம் ஏற்படுத்தி தலைவராகவும் உள்ளேன்.
இயற்கை விவசாயத்துக்கு அடிப்படையான நாட்டு மாடுகள் மூலம் கோசாலை அமைத்து சாணம், சிறுநீர் ஆகியவற்றில் இருந்து பஞ்சகவ்யா, ஜீவாமிர் தக்கரைசல், மீன் அமிலக்கரைசல், மண்புழு உரம், மூலிகை பூச்சிவிரட்டி என அனைத்தும் இயற்கை முறையில் அறிவியல் தொழில்நுட்பத்தோடு இயற்கை விவசாயம் செய்துவருகிறோம்.
தற்போது 12 ஏக்கரில் பங்கனப்பள்ளி ரகம் 900 மரங்கள் உள்ளன. சப்போட்டா 12 ஏக்கரில் 1,200 மரங்கள் உள்ளன. 6 ஏக்கரில் 600 தென்னை மரங்கள் உள்ளன. இயற்கை விவசாயத்தில் விளைந்ததால் நல்ல விலை கிடைக்கிறது.
தேங்காய்க்கு விலை இல்லாததால் தேங்காயில் இருந்து எண்ணெய் தயாரிக்க முடிவெடுத்தோம். பொதுவாக, மரச்செக்கில் எண்ணெய் எடுப்பதற்கு தேங்காயோடு வெல்லம், ஏலக்காய், கருப்பட்டி, தேங்காய் தண்ணீர் கலப்பது வழக்கம். நாங்கள் எந்த கலப்பும் இல்லாமல் தேங்காயில் இருந்து தூய எண்ணெய் பிரித்தெடுக்கிறோம்.
இதற்காக கும்பகோணத்தில் மரச்செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கிறோம். ஒரு கிலோவுக்கு கூலியாக ரூ.22 தருகிறோம். கேரளாவில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் இயற்கை தேங்காய் எண்ணெய் என சான்று பெற்று அமெரிக்கா அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
இதை அறிந்து வேளாண் துறை சார்பில் வெளி மாவட்ட விவசாயிகள் பட்டறிவு பயணமாக வருகின்றனர். தேடிவரும் விவசாயிகளுக்கு எங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறோம். என் மனைவி மணிமேகலை, மேலாளர் முத்து ஆகியோரது உழைப்பில் பண்ணை முழுவதும் இயற்கை வாசம் வீசுகிறது. மற்ற கழிவுகள் தேங்காததால் பண்ணையில் கொசு என்பதே கிடையாது என்றார்.