தமிழகத்தில் ஆவின் பால் விலையை டிசம்பர் மாத இறுதிக்குள் 30 சதவீதம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விலையை அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 7 முறை தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. தனியார் பாலின் விலையோடு ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை மிகக் குறைவாக உள்ளது. இதனால் ஆவின் பாலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 21.50 லட்சம் லிட்டர் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 11.50 லட்சம் லிட்டர் பால் தினமும் விற்பனை ஆகிறது.
அதே நேரத்தில் பால் கொள்முதல் விலையை அரசு குறைத்து வழங்குவதால் 12 ஆயிரமாக இருந்த ஆவின் கூட்டுறவு மையங்கள் தற்போது 8 ஆயிரமாக குறைந்துள்ளன. பல பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் கூறும்போது, “ தமிழகத்திலேயே அதிகப்படியாக 5 லட்சம் லிட்டர் பால் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் அரசு கொள்முதல் விலையை ஏற்றாத காரணத்தால் தற்போது அது 4 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ. 7-ம், ஒரு லிட்டர் எருமை பாலுக்கு ரூ. 9-ம் உயர்த்தி கொடுக்க வேண்டும்” என்றார்.
பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவேண்டியுள்ள நிலையில், பாலின் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத விஷயமாகியுள்ளது.
இந்நிலையில் ஆவின் பால் விலையை டிசம்பர் மாதத்துக்குள் 30 சதவீதம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் சிலர் கூறும்போது, “ தனியார் பாலுடன் ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை மிகக் குறைவாக உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள், பாலின் கொள்முதல் விலையை உயர்த்தித் தருகிறது. இதன் காரணமாக வரும் டிசம்பர் மாதத்துக்குள் ஆவின் பால் விலையை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்றனர்.