இலங்கையுடன் இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
திரிகோணமலையில், இலங்கை-இந்தியக் கடலோர காவற்படை வீரர்கள் கூட்டாக பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இந்த பயிற்சி இன்று (21-ஆம் தேதி) தொடங்குகிறது. முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்: இலங்கையுடன் இந்தியா பயிற்சியில் ஈடுபடுவது தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும். இவ்வாறு, தமிழக மக்கள் உணர்வுகளை மதிக்காமல் பயிற்சியில் இந்தியா பங்கேற்பது அதிருப்தி அளிக்கிறது. இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பு கூடாது என பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடத்திச் செல்வது, கைது செய்வது, சித்திரவதை செய்வது, சிறையில் நீண்ட நாளாக அடைத்து வைத்திருப்பது என பல்வேறு அத்துமீறல்களை நிகழ்த்தி வரும் நிலையில் அவர்களுடன் இந்தியா கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபடுகிறது.
இந்திய அரசாங்கம் வெளிப்படையாகவே இலங்கை கடற்படைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தமிழக மக்கள் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் இலங்கையுடன் நட்பு பாராட்டு வருகிறது இந்தியா.
தமிழர்கள் மீது வன்முறைகளையும், மனித உரிமை அத்துமீறல்களையும் நிகழ்த்தி வரும் இலங்கைக்கு ராணுவ ஒத்துழைப்பு அளிப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் 4 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக் காட்டி, இவ்விஷயத்தில் இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.