தமிழகம்

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள மகள்களை பார்க்க பெற்றோருக்கு தடையில்லை: உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 2 மகள்களையும் பெற்றோர் எப்போது வேண்டுமென்றாலும் சென்று பார்க்கலாம் என அனுமதி யளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை நேற்று தள்ளுபடி செய்தது.

கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்த கே.சத்தியஜோதி என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘‘பொறியியல் பட்டதாரிக ளான தனது மகள்கள் கீதா(34) மற்றும் லதாவை (31) ஈஷா யோகா மையத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். ஆகவே அவர்களை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஈஷா யோகா மையத்துக்கு நேரில் சென்று அந்த 2 பெண்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தனது அறிக் கையை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘மாவட்ட முதன்மை நீதிபதி தனது அறிக்கையில் அந்தப் பெண்கள் இருவரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களை யாரும் சட்ட விரோதமாக அங்கு அடைத்து வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த 2 பெண்களையும் பெற்றோர் நேரில் சென்று பார்க்க எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் எப்போது அங்கு செல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே ஈஷா யோகா மையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும். அதுபோல அந்தப் பெண்களை பெற்றோர் தவிர வேறு யாரும் சென்று பார்க்கக்கூடாது’’ எனக்கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் நீதிபதிகள் நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண்களின் தந்தை காமராஜிடம், ‘‘குழந்தைகளின் முன்மாதிரியே பெற்றோர்கள்தான். அவர்களிடம் அன்பு, பாசத்தை பெற்றோர் வெளிப்படுத்த வேண்டும். குழந்தைகளை மாதக்கணக்கில் தவிக்க வைத்துவிட்டு பெற்றோர் வெளியூர் சென்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்?. குழந்தைகளின் மனதையும் பெற்றோர் புரிந்து நடக்க வேண்டும்’’ என அறிவுரை கூறினர்.

SCROLL FOR NEXT