வங்கக் கடல் புயல் நாகப்பட்டினத்துக்கு பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் அதிகமான மழையை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களில் நாகப்பட்டினம் மாவட்டம் முழுமைக்கும் சேர்த்து 500 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இது ஓரிருநாளில் வடிந்துவிடக்கூடிய அளவுதான் என்றாலும் இந்த ஆண்டு வாய்க்கால்கள், ஆறுகள், வடிகால்கள் என்று எதுவும் தூர் வாரப்படாததால் வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு மாதத்துக்குள் நட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மற்ற பயிர்கள் மூழ்கவில்லை. அத னால் பெரியளவில் பாதிப்பில்லை.
குறிப்பாக தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய இரண்டு தாலுக்காக்களும் வடிகால் பகுதியாக இருப்பதால் அங்குள்ள மழைநீர் மட்டுமின்றி மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய பகுதிகளின் மழைநீரும் இங்கு வந்துதான் வடியும். அதனால் முழுமையாக வடிவதற்கு ஒரு வாரத்துக்கும் மேலாகும்.
தற்போதுள்ள நிலைமையில் மேலும் மழை பெய்யாமல் வெயில் அடிப்பதால் மூழ்கியுள்ள பயிர்கள் 2 நாட்களுக்குள் தண்ணீர் வடிந்துவிட்டால் காப்பாற்றப்பட்டு விடும் என்கிறார்கள் விவசாயிகள். கடல் சீற்றம் இன்னமும் குறை யாமல் இருப்பதாலும் வடிகால்கள் மூலம் கடலுக்குச் சென்று வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.