தமிழகம்

மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தொடர் ஆலோசனை

செய்திப்பிரிவு

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோ சனை நடத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானப் புரட்சியை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அன்று முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீடு களை கட்டியுள் ளது. தினமும் அவரை சந்திக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக, எம்ஜிஆர் பாணியில் நீதிகேட்டு மக்களை சந்திக்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அவர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான பிரச்சார வாகனமும் தயாராக உள்ளது. இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை தினமும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை நேற்று முன்தினம் சந்தித்தார். அதைத் தொடர்ந்து சேலம் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஆலோ சனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எம்எல்ஏக்கள் செம் மலை, பாண்டியராஜன் மற்றும் வனரோஜா எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முன்னாள் அமைச் சர் பாண்டியராஜன் பேசும்போது, ‘‘தேர்தல் ஆணையத்தில் சாதகமான முடிவு வந்தால், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். அப்போது நிர்வாகிகள் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு, நாம் நினைத்ததை நடத்திக்காட்ட வேண்டும்’’ என்றார்.

இந்த ஆலோசனையின்போது, சோழிங்கநல்லூர் பகுதி தேமுதிக வைச் சேர்ந்த மெட்ரோ குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட் டோர் ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந் தனர்.

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் குறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் என வட மாவட்டங்கள் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை மே 15-ம் தேதிக்குள் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், நீதி கேட்டு பயணத்தை ஓபிஎஸ் தொடங்குவார். அதுவரை, தினமும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அந்தந்த மாவட்டங்கள் சார்ந்த பிரச்சினைகளையும் கேட்டறிகிறார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT