தமிழகம்

சிறைவாசிகளின் விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்க ரூ.4 கோடி: திருப்பூர், திருவள்ளூரில் ரூ.57 கோடியில் நீதிமன்ற கட்டிடங்கள் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

நடப்பாண்டில் திருப்பூர், திருவள் ளூரில் ரூ. 57 கோடியே 26 லட்சத்தில் நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சிறைவாசிகளின் அனைத்து விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறை ரூ.4 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

சிறைவாசிகள் தப்பித்தல், சிறை வாசிகள் மீது தாக்குதல்கள், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும், வழிக் காவல் போக்கு வரத்து செலவுகளைக் குறைக்கவும் காணொலி கலந்துரையாடல் மூலம் சிறைவாசிகளின் காவல் நீட்டிப்புக்கு வழி செய்யும் திட்டம் கடந்த 2004-ல் அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இந்தத் திட்டம் அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் உள்ளிட்ட 33 சிறை வளாகங்கள், 136 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 352 நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. நடப்பாண்டில் இந்த வசதி ரூ. 5 கோடியே 23 லட்சம் செலவில் 44 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 51 நீதிமன்றங்களில் ஏற்படுத்தப்படும்.

அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்ட்ல் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிறைச்சாலைகளில் மேலும் 100 சிசிடிவி மற்றும் ஐபி கேமராக்கள் பொருத்தப்படும். இச்சிறைகளில் உள்ள சிறைவாசிகளின் அனைத்து விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறை ரூ.4 கோடியில் அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.511 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. தற்போது 89.6 சதவீத நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

நடப்பாண்டில் திருப்பூரில் 13 நீதிமன்றங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் ரூ.33 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

திருவள்ளூரில் உள்ள ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 8 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களு டன் கூடிய 7 கூடுதல் நீதி மன்ற கட்டிடங்கள் ரூ.23 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

SCROLL FOR NEXT