தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் உள்ள பெண் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை எப்போது நடக்கும் என்பது நாளை (வெள்ளிக்கிழமை) தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பாக ஜாமீன் மனு இதுவரைத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

அவரது வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான தீர்ப்பு வெளிவர 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும்,

ஆகவே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக் காலத்தைக் கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 29-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் வழங்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் நால்வரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (புதன்கிழமை) காலை வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில், அசோகன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு வந்து, ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT