தமிழகம்

கோவை முஸ்கான் - ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

செய்திப்பிரிவு

கோவை முஸ்கான் - ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் (10), அவளது தம்பி ரித்திக் (7) ஆகிய இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு கடத்தப்பட்டனர். பின்னர் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த வழக்கில் மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மோகனகிருஷ்ணன் என்கவுன்ட்டர் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மனோகரன் மீதான கொலை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், 2012-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மகளிர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்தது.

மனோகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததை நிரூபிப்பதற்கான நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லை. கோவை போலீஸார் கட்டுக்கதை மூலம் சம்பவத்தை ஜோடித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிரபராதியான என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மதன் லோக்கூர், ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனோகரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், கோவை போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT