தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் திருப்பூர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையின் 200 வார்டுகளில் 108 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.
தமிழக உள்ளாட்சிப் பதவிகளுக் கான தேர்தல் அடுத்த மாதம் நடத்தப் பட உள்ளது. தேதி அறிவிக்கப் படாவிட்டாலும், இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வருகிறது. உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, இன சுழற்சிமுறை ஒதுக்கீடு தொடர்பான பட்டியல்களை உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறைகள் வெளியிட்டு வருகின்றன. இதில், தமிழகத்தில் 7 மாநகராட்சி மேயர் பதவிகள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணை நேற்று வெளியானது.
இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கும், திருப்பூர் மாநகராட்சி ஆதிதிராவிடர் பெண் மற்றும் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை மாநகராட்சிகள் பெண்கள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, சேலம், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாநகராட்சிகளும் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கும், 16 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 92 வார்டுகள் பெண்கள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 124 வார்டுகள் தவிர மற்ற 76 வார்டுகளும் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களும் வெளியாகி யுள்ளன.