பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்பு மணி புகழாரம் சூட்டினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் அன்புமணி பேசும்போது, "திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா உள்பட அனைவரும் அரசியல்வாதிகள். ஆனால் ராமதாஸ் சமூக சீர்திருத்தவாதி.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஒரு அரசாங்கமே ஒரு சாதியை ஒடுக்குவது இங்குதான் நடக்கிறது. நாங்கள் சாதி அரசியல் நடத்தவில்லை. சாதி அரசியல் நடத்தினாலும் அதில் தவறில்லை.
ராமதாஸை காரணமின்றி சிறையில் அடைத்து, ஜெயலலிதா கொலை முயற்சி செய்துள்ளார். வெளியே வந்தவுடன் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
டெல்லியைப் போல் தமிழகத்தில் பா.ம.க. ஒரு மாற்றத்தை தரப்போகிறது. திமுகவில் 2ஜி ஊழல், இன்னொருவர் பட்டமரம் என்கிறார், குடித்தால் தப்பா என்று கேட்கிறார். காங்கிரஸில் ஒவ்வொருவர் தலைமையில் 10 கட்சிகள் உள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படகில் ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை அனுப்பி தமிழக மீனவர்களைப் பாதுகாப்போம். இனி எந்த வழக்கும் வராமல் பா.ம.க.வினர் நடந்துகொள்ளுங்கள்" என்றார் அன்புமணி.
இக்கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசும்போது, "தமிழக அரசியல் கட்சிகள் வன்னியர்களுக்கு எதிரானவை. மாமல்லபுரம் மாநாட்டுக்கு பாமகவினர் எத்தனையோ இடங்களைத் தாண்டித்தான் வந்தார்கள். மரக்காணத்தில் மட்டும் திட்டமிட்டு, பாமகவினருக்கு எதிராக கலவரம் தூண்டப்பட்டது.
இப்பிரச்சினையில் என்னை 4 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். எத்தனை முறை அடைத்தாலும் பயப்பட மாட்டேன். தர்மபுரி கல்லூரிப் பேருந்து எரிப்பு, மகாமகம் சம்பவங்கள் தொடர்பாக ஜெயலலிதா மீதுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
கூட்டணிக்காக பல கட்சிகளும் பாமகவின் கதவைத் தட்டுகின்றன. ஆனால், பாமக திறக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தந்தால், மோடியைவிட சிறப்பான ஆட்சியை அன்புமணி தருவார்" என்றார் ஜெ.குரு.