பாஜக கூட்டணி தொடர்பாக வெள்ளிக்கிழமை நல்ல செய்தி வரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக பாஜக அலுவலகத்தில், ‘வெற்றியின் கீதம்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரப் பாடல்களுக்கான குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்களை தமிழக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சின்னப்பா கணேசன் ஆகியோர் எழுதியுள்ளனர். முதல் சிடியை பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட பாஜக மாநில முன்னாள் தலைவர் இல.கணேசன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.ம.தே.க. நிர்வாகிகள், பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தனர். அப்போது கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறும்போது, ’எந்த நிபந்தனையுமின்றி பாஜக கூட்டணியில் இணைகிறோம். நரேந்திர மோடியை பிரதமராக்குவதே எங்கள் லட்சியம்’ எனத் தெரிவித்தார்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கூட்டணி தொடர்பாக உங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) நல்ல செய்தி வரும். நரேந்திர மோடி பங்கேற்கும் சென்னை கூட்டத்தில் பல கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள்தான் கூட்டணியில் உள்ளன என்று அர்த்தமல்ல. மோடியின் கூட்டம் முடிந்த பிறகும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும்.
பங்காரு லட்சுமணன் தூய்மையானவர். அவரைப் பற்றியோ, பாஜக பற்றியோ எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூற காங்கிரஸாருக்கு எந்த அருகதையும் இல்லை.
கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சிக்கும் நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. பாமகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். எங்கள் பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மோகன் ராஜூலு, வானதி சீனிவாசன் மற்றும் லலிதா குமாரமங்கலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.