தமிழகம்

மோடி காலில் விழுவதற்கே அதிமுக-வினருக்கு நேரம் சரியாக இருக்கிறது: இளங்கோவன் கிண்டல்

செய்திப்பிரிவு

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுக ஆட்சி, ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம், மாட்டிறைச்சித் தடை உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி கருத்து கூறினார்.

அவர் பேசியதாவது:

கும்பகோணத்தில் என் கொடும்பாவியை எரித்தார்கள். பொதுவாக கொடும்பாவி எரித்தால் சம்பந்தப்பட்டவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பார்கள். எனவே அவர்களுக்கு நன்றி.

மாட்டிறைச்சி இந்தியாவில் பொதுவான உணவு, சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியில் கூட ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தலையிடமாட்டார்கள், மோடி அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது.

பாலில் கலப்படம் என்பது ஜெயலலிதா ஆட்சியிலேயே விஸ்வரூபம் எடுத்தது. முதலில் ஆவின் பால் தரம் நிறைந்ததா? மக்கள் உயிருக்குப் பாதுகாப்பானதா? என்று தகுந்த நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும். தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்குவதற்காகவே அமைச்சர் கலப்படம் என்று அறிவித்தார்.

அதிமுகவின் 100 நாள் சாதனை ஏன், 6 ஆண்டுகால ஆட்சியும் கூட பூஜ்ஜியம்தான். இதை நினைத்தால் வேதனை அளிக்கிறது. அதிமுக கட்சியினருக்கு மோடியின் காலில் விழுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. பாரதிய ஜனதாவின் பினாமி ஆட்சியாக அதிமுக உள்ளது.

ரஜினிகாந்த் என்பவர் பொதுவானவர், அவரை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பிடிக்கும். ஆனால் அவர் அரசியலுக்குள் வந்து சிறு வட்டத்துக்குள் சென்று விடக்கூடாது.

பாஜக இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இப்போதுதான் கருப்புப் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது.

மேட்டூர் அணையை தூர்வார வேண்டுமென்றால் தண்ணீர் இல்லாத போது தூர்வார வேண்டும். தண்ணீர் இருக்கும் போது தூர்வாருவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல்தான்.

டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும். இல்லை அதற்கு பாதுகாப்புத் தேவையென்றால் காவல்நிலையத்துக்குள் டாஸ்மாக்கை நடத்த வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும்.

கருணாநிதி காலத்தில் கர்நாடகத்துடன் சுமுக உறவு இருந்ததால் தமிழகத்துக்கு நீர் கிடைத்தது, இப்போது சுமுக உறவு இல்லை. அதனால் தண்ணீர் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT