தமிழகம்

தமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை: உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் மாலன் பேச்சு

செய்திப்பிரிவு

சேவகனாக, அடிமையாக, எழுத்துக்கூலிகளாக, அகதியாக தமிழன் எங்கெல்லாம் சென்றா லும், அவன் கங்காரு தன் குட்டியை வயிற்றில் சுமப்பது போல், தாய்ப்பூனை தன் குட்டியை வாயில் தூக்கிச் செல்வது போல் தமிழை சுமந்து சென்றுள்ளான். அங்கிருந்து படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டிருக்கிறான்.

எனவே, தமிழ்நாட்டில் தமிழ் இப்படிச் சென்று கொண்டி ருக்கிறதே, தமிழ் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ் அயலகத் தமிழர்களால் கடல் கடந்து கொண்டாடப்பட்டு, வளமையுடன் வாழ்ந்து வருகிறது’ என்றார் எழுத்தாளரும், பத்திரிகை யாளருமான மாலன்.

3 நாள் மாநாடு:

தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பிலான உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு குறித்த 3 நாள் மாநாடு கோவை காளப்பட்டி என்.ஜி.எம் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

டாக்டர் நல்லா பழனிச்சாமி தலைமை வகித்தார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் பேசினார். ரே.கார்த்திகேசு, இந்திரன், சேரன், அழகிய பாண்டியன், எஸ்.பொ, பெருந்தேவி என அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜெர்மனி உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், புவியரசு, நாஞ்சில்நாடன், சிலம்பொலி செல்லப்பன், திருப்பூர் கிருஷ்ணன், சி.ஆர்.ரவீந்திரன், சுப்பரபாரதிமணியன் என நூற்றுக்கணக்கான உள்ளூர் எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

அர்த்தமற்ற பிதற்றல்:

மாநாட்டில் மாலன் பேசியது: ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி நிற்கிற, பரவி நிற்கிற தமிழ் எழுத்தின் எழுச்சிப் பிரதிநிதிகள் இங்கே கூடியிருக்கின்றனர்.

குமரி முதல் வேங்கடம் வரை விரவி நின்ற தமிழ்கூறும் நல்லுலகு உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஆனால் இலங்கை, கனடா, ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் சென்ற தமிழர்கள் தமிழுக்கு கொடை தந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் என்பது உலகம் தழுவிய மொழி. தமிழ் நலிவது, தமிழே அழிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தம் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது தாயகம் கடந்த தமிழ்.

விரவிக்கிடக்கும் தமிழ்:

ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியம் எப்படி லண்டன் ஆங்கில இலக்கியம், அமெரிக்க ஆங்கில இலக்கியம், மூன்றாம் நாடுகளின் ஆங்கில இலக்கியம், இந்திய ஆங்கில இலக்கியம் என்று வெவ்வேறு கூறுகளுடன் நிற்கிறதோ, அதேபோல் தமிழ் இலக்கியமும் நாடு கடந்து நிற்கிறது. இலங்கை தமிழ் இலக் கியம், மலேசியா தமிழ் இலக்கியம், சீனா தமிழ் இலக்கியம், ஜெர்மன் தமிழ் இலக்கியம், அமெரிக்க, லண்டன் தமிழ் இலக்கியம் என்று விரவிக் கிடக்கிறது.

தமிழை தாங்கும் 4 தூண்கள்:

ராஜராஜன் சோழன் காலத்தில் தமிழன் கடல் கடந்து வாணிபம் செய்யப்போனான்; சேவகனாகப் போனான். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைகளாக கடல்கடந்து போனான். சுதந்திரத்திற்குப் பிறகு கடல்கடந்து எழுத்துக்கூலிகளாகப் போனான். இடைப்பட்ட காலத்தில் அகதிகளாகக்கூட போனான். அப்போதெல்லாம் அவன் கங்காரு தன் குட்டியை சுமப்பது போல், தாய்ப் பூனை தன் வாயில் குட்டியை கவ்விச் செல்வதுபோல் தமிழை மட்டும் அன்னையின் லாவகத்தோடு கொண்டு சென்றான்.

தமிழன் எங்கு சென்றாலும் தன் மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கிறான். தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறான்.

கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை ஊடகம், தொழில்நுட்பம், இலக்கியம், கல்வி ஆகிய 4 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதுவே இக் கருத்தரங்கின் மூன்று நாட்களிலும் விவாதப் பொருளாக இருக்கும் என்றார் மாலன்.

SCROLL FOR NEXT