இந்தியாவில் தங்கத்துக்கு 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் தற்போது வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் திருச்சி விமான நிலைய உட்பகுதியில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் அங்கே உள்ள ஜன்னலில் 3 பொட்டலங்கள் கிடப்பதைக் கண்டனர். இதுகுறித்து விமான நிலைய அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று 3 பொட்டலங்களையும் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு பார்சலிலும் தலா ஒரு கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் என மொத்தம் 3 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி.
இரவு 11.30 மணியளவில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வரும் விமானத்தில் வந்த பயணிகள் யாரேனும் அதை கடத்தி வந்தனரா? அல்லது அதற்கு முன்பே வேறு விமானங்களில் வந்த கடத்தல் நபர்கள் சுங்கத் துறை அலுவலர்களின் சோதனைக்கு பயந்து தங்கத்தை கழிவறையில் மறைத்து வைத்துச் சென்றனரா என விசாரித்து வருகின்றனர்.
விமான நிலையத்தின் உட்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் தங்கம் கடத்தி வந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் விமான நிலைய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.