தீபாவளி பண்டிகையின்போது ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தலா 10 ஆயிரம் டன் உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அன்றாட சமைய லில் உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் தவிர்க்க முடியாத வையாகும். வெளிச்சந்தையில் இவற்றின் விலை அதிகரித்து வந்ததைக் கருத்தில் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஒரு கிலோ வீதம் உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 9 ஆயிரம் டன் உளுத்தம் பருப்பும், 13,500 டன் துவரம் பருப்பும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக பல ரேஷன் கடைகளில் 20-ம் தேதிக்குப் பிறகு துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு கிடைக்காத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக, தலா பத்தாயிரம் டன் உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு உணவுத்துறை அதிகாரி ஒருவர், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகை நெருங்கு வதால், ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் தடையின்றி கிடைக்கச் செய்யும் நடவடிக்கையாக அவற் றினை குறுகிய கால கொள் முதல் அடிப்படையில் வாங்கி விநியோகிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அவசரமாக வாங்கப் பட்டாலும், அக்மார்க் தர நிர்ணய விதிகளுக்குட்பட்ட தரமான பருப்பு ரகங்களை மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கனடா நாட்டு துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தலா 10 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.